Monday, March 3, 2008

குமுதம் ஓ பக்கங்கள்!

கிரிக்கெட் விளையாட்டு கண்ணியமான கனவான்களின் ஆட்டம் என்பது அதன் ஆதரவாளர்களின் நம்பிக்கை. இல்லையில்லை, அது பதினோரு முட்டாள்கள் ஆடுவதை பல்லாயிரம் முட்டாள்கள் வேடிக்கை பார்க்கும் விஷயம் என்பதாக பெர்னாட்ஷா சொல்லியிருக்கிறார். அவர் சொன்ன இரு பிரிவுகளிலும் தாற்காலிகமாக இருந்து வெளியேறி வந்து விட்டேன்.

கல்லூரி வரும்வரை கிரிக்கெட்டில் ஒன் டவுன் பேட்ஸ்மேனாக ஆடிய நான் ஓரிருமுறை என் கண்ணாடி உடைந்து, மயிரிழையில் என் கண்கள் தப்பியதையடுத்து விளையாடுவதை விட்டுவிட்டு அம்பயராகவும் ஸ்கோரராகவும் பிறகு பார்வையாளராகவும் மெல்ல மெல்ல மைதானத்தை விட்டு வெளியே வந்துவிட்டேன்.

ஆடுகிறவருக்கு மட்டுமே சுவையான ஆட்டம் கிரிக்கெட் என்பது என் கருத்து. நான் பள்ளிக்காலத்தில் ஆடிய பிற ஆட்டங்களான சடுகுடு, கால்பந்து முதலியவையும் வாலிபால், கூடைப்பந்து, ஹாக்கி முதலியவையும் மட்டுமே பார்ப்பவருக்கும் சுவையான ஆட்டங்கள். கால்பந்தைப் போல குறுகிய நேர ஆட்டமாக கிரிக்கெட்டையும் ஆக்கி 20_20 வரை கொண்டு வந்த பின்னரே கிரிக்கெட்டையும் ஓரளவு பார்க்க சுவையானதாக மாற்ற முடிந்திருக்கிறது.

இப்போது கிரிக்கெட் விளையாட்டாக இல்லாமல் சூதாட்டமாகவும் வியாபாரமாகவும் முற்றிலும் மாற்றப்பட்டுவிட்டது. கிரிக்கெட் ‘வீரர்’களை ஏலம் போட்டிருக்கிறார்கள். தலைக்கு இரண்டு கோடி ரூபாய் முதல் நான்கு கோடி ரூபாய் வரை ஏலத்தொகை!

மொத்தம் எட்டு அணிகளைக் கொண்டு ‘இந்தியன் பிரீமியர் லீக்’ என்ற பெயரில் போட்டிகளை நடத்தப் போவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சங்கம் அறிவித்தது. முதல் ரவுண்டில் அணிகளை விற்றார்கள். சென்னை அணியை வாங்கியது தி.மு.க.வுக்கு நெருக்கமான தொழில் நிறுவனமான இந்தியா சிமெண்ட்ஸ். பெங்களூரு அணி சாராய அதிபர் விஜய் மல்லையாவுடையது. டெல்லி அணி ஜி.எம்.ஆர். என்ற ரியல் எஸ்டேட் கம்பெனிக்குச் சொந்தம். கொல்கத்தா அணியின் அதிபர் நடிகர் ஷாருக்கான். ஹாக்கி பற்றி ‘சக்தே’ படம் எடுத்து சம்பாதித்த ஷாருக் இந்த அளவு பணத்தை ஹாக்கிக்குத் தரவில்லை. மும்பை அணியின் முதலாளி ரிலையன்ஸ் முகேஷ் அம்பானி. ஹைதராபாத் அணியின் உரிமையாளர் டெக்கான் கிரானிகிள் பத்திரிகை. மொஹாலி அணியின் முதலாளி ஜவுளி அதிபர் வாடியா. ஜெய்ப்பூர் அணியை வாங்கியது கிரிக்கெட்டையே வியாபாரமாக நடத்துவதற்கென்றே தொடங்கப்பட்டிருக்கும் ஒரு கம்பெனி. இதற்கு நெருக்கமானவரான லலித் மோடி இந்திய கிரிக்கெட் வாரியத்தின் துணைத்தலைவர்; சிகரெட் கம்பெனியான காட்பிரே பிலிப்சின் அதிபர்; ஏல அடிப்படையில் நடத்தப்படும் பிரீமியர் லீக் அமைப்பின் தலைவர்.

மொத்தமாக இந்த வர்த்தகத்தில் புரளும் தொகை சுமார் 7000 கோடி ரூபாய்கள்! எங்கிருந்து இந்தப் பணம் வரும் ? பல்லாயிரக்கணக்கான முட்டாள்கள் டி.வி. முன்னாலும் மைதானத்திலும் திரளுவதால் வரும் விளம்பர வருவாயும் டிக்கெட் விற்பனைத் தொகையும்தான் இது! அதாவது மக்கள் பணம்தான்.

வர்த்தக சினிமாவைப் போலவே இப்போது உருவாக்கப்பட்டுள்ள வர்த்தக கிரிக்கெட் வெறும் வர்த்தகம் மட்டும் அல்ல. இதற்குப் பின்னால் இருக்கும் அரசியல் கவனிக்கப்பட வேண்டும். சென்னைக் குழுவின் முக்கிய ஆட்டக்காரர்கள் யார் தெரியுமா? ஆறுமுகம், தமிழ்ச்செல்வன், சீனிவாசன், ரமேஷ், கோபால் போன்ற பெயர்கள் அல்ல. தோனி! ஜோகிந்தர் ஷர்மா! சுரேஷ் ரெய்னா! ஜேக்கப் ஓராம் ! இதுவரை இந்தியாவில் வட்டாரவாரியாக நடத்தப்பட்ட லீக் மேட்சுகள், ரஞ்சி போன்றவற்றின் நோக்கமே வட்டார வாரியாக திறமையாளர்களை அடையாளம் கண்டு தேர்வு செய்வதுதான். இப்போது மொழி , வட்டார அடையாளங்களை அழித்துவிட்டு, வட்டாரத்தின் பெயரால் டீம்கள் உருவாக்கப்படுகின்றன. பெரும் தொகைகள் புரளுவதால் இது பற்றி யாருக்கும் அக்கறையில்லை.

அடுத்த கட்டமாக ‘ஏலத்தில் பிடித்து வரப்பட்ட ஆஸ்திரேலியரை இந்திய அணியில் ஆட வைத்தால் என்ன குடி முழுகிப் போய்விடும்?’ என்ற கேள்வி வரும். சென்னை அணியில் தென் ஆப்ரிக்கர் ஆடலாம் என்றால், இந்திய அணியிலும் ஆடட்டுமே.

சினிமா, கிரிக்கெட் வணிகமயமானதையடுத்து எனக்கு ஒரு புது யோசனை.அரசியலிலும் இதே ஏல முறையைக் கொண்டு வரலாமே. சுப்பிரமணியன் சுவாமி, ராமதாஸ் போன்றோர் முன்கை எடுத்து இதைப் பரிசீலிக்கலாம்.

அம்பானிகள், மல்லையா, ரஜினிகாந்த், ஷாருக்கான், போன்றவர்களின் கம்பெனிகளிடம் அரசியல் கட்சிகளை ஏலத்தில் எடுக்கச் சொல்லிவிடலாம். காங்கிரஸ், பி.ஜே.பி, தி.மு.க, பாம.க, அ.தி.மு.க, ம.தி.முக என்று எல்லா கட்சிகளையும் முதல் கட்ட ஏலம் விடலாம். அடுத்த ரவுண்டில் எந்தக் கட்சிக்கு எந்தெந்த தலைவர்கள் வேண்டும் என்று ஏலம் விடலாம். கிரிக்கெட் ஆட்டக்காரர்களில் டெண்டுல்கர், கங்குலி, திராவிட் போன்றோருக்கு ஸ்டார் அந்தஸ்து கொடுத்து அதிக தொகை நிர்ணயித்தது போல கருணாநிதி, ஜெயலலிதா, சசிகலா, விஜய்காந்த், ராமதாஸ், திருமா முதலியோரை ‘ஏ’ அந்தஸ்தில் வைக்கலாம். அடுத்த இடத்தில் ஸ்டாலின், அழகிரி, கனிமொழி, தயாநிதி, வைகோ.... கடைசி ரவுண்டில் காங்கிரஸ் புள்ளிகள், நல்லகண்ணு, தா.பாண்டியன், வரதராசன் போன்றவர்களை இலவச இணைப்பாகக் கொடுத்துவிடலாம். திறமையான மேடைப்பேச்சாளர்களுக்கு தனி ஏலம். நாஞ்சில் சம்பத், சி.மகேந்திரன், வெற்றிகொண்டான் என்று பட்டியல் தயாரிக்கலாம். தாதாக்கள், ரவுடிகளுக்கு இன்னொரு பட்டியல் இன்னொரு ரேட். சரியான டயத்தில் கூட்டணி மாறும் யோசனை தரும் கன்சல்டண்ட்டுகளுக்கும் ஏலம் வைக்கலாம்.

இப்படியெல்லாம் நடந்துவிடக் கூடாது என்றுதான் விரும்புகிறேன். கிரிக்கெட்டில் நடப்பதைப் பார்க்கும்போது, எதுவும் நடக்கும் என்று பயமாக இருக்கிறது. எனக்கே தெரியாமல் என்னைக் கூட யாராவது ஏலத்தில் விட்டு விடக் கூடும்!

கலைஞர் டி.வி. மன்னிப்பு கேட்கவேண்டும்!

ஜெயலலிதாவுக்கு அறுபது வயதானதால், பகிரங்க கடவுள் நம்பிக்கையாளரான அவர், தன் தோழி சசிகலாவுடன் திருக்கடையூர் கோயிலுக்குப் போய் சாமி கும்பிட்டார். கோயில் சிவாச்சாரியார் ஜெயலலிதாவிடம் ஒரு மாலையைக் கொடுத்தார். அதை அவர் சசிகலாவுக்குச் சூட்டினார். சிவாச்சாரியார் ஒரு மாலையை சசிகலாவிடம் கொடுத்தார். அவர் அதை ஜெயலலிதாவுக்குச் சூட்டினார். பின்னர் இருவரும் மாலையைக் கழற்றி பக்கத்தில் இருந்த உதவியாளரிடம் கொடுத்தார்கள். இதைப் படம் எடுப்பதோ வீடியோ எடுப்பதோ தடுக்கப்படவில்லை. படங்களும் வீடியோக்களும் வெளியாகியிருக்கின்றன.

கலைஞர் கருணாநிதியின் குடும்பத்தினருக்குச் சொந்தமான கலைஞர் டி.வி. இந்தச் செய்தியை திரும்பத் திரும்பக் காட்டி கொச்சைப்படுத்தியது. அறுபதாம் கல்யாணம் கொண்டாடும் தம்பதிகள் வழக்கமாக கும்பிடும் திருக்கடையூர் கோயிலில் ஜெ.வும் சசியும் ‘மாலை மாற்றிக்‘ கொண்டது சரியா என்ற கேள்வியை கலைஞர் டி.வி. எழுப்பியது. பொது மக்களின் பேட்டிகளை ஒளிபரப்பியது. பெண்ணுக்குப் பெண் மாலை மாற்றினால் என்ன அர்த்தம் என்ற தொனியில் இந்தச் செய்திக் கோவை அமைந்திருந்தது.

மாலை மாற்றினார்கள் என்று கலைஞர் டி.வி.யும் மக்கள் டி.வி.யும் ஹிந்து பத்திரிகையும் சொல்லியிருப்பது தவறு. சசிக்கு ஜெ. மாலை அணிவித்தார். ஜெ.வுக்கு சசி மாலை அணிவித்தார். அவ்வளவுதான். மாலை மாற்றும் சடங்கு என்பது தன் கழுத்தில் இருக்கும் மாலையை எடுத்து மற்றவருக்கு அணிவிப்பதேயாகும். அப்படி எதுவும் நடக்கவில்லை.

ஆனால் அப்படி ஒன்று நடந்தது போல கலைஞர் டி.வி. செய்தி ஒளிபரப்புவதும் தி.மு.க. ஆதரவு ஏடுகள் கிசுகிசுப்பதும் எதற்காக? எதையும் உடைத்துப் பேசித்தான் எனக்குப் பழக்கம். ஜெ._சசிகலா இருவரும் ஓரின உறவு உடையவர்கள், லெஸ்பியன்கள் என்று அவதூறு செய்வதுதான் இந்த முயற்சிகளின் நோக்கம். நேரடியாகச் சொன்னால் அவதூறு வழக்கு வரும் என்பதால் மறைமுகமாகச் சொல்லும் முயற்சி செய்யப்படுகிறது. எவ்வளவு அருவருப்பான அரசியல் இது ?

பொது வாழ்க்கையில் கண்ணியம் பற்றி தன் 75_ம் வயதுக்குப் பிறகு அடிக்கடி பேசத்தொடங்கியிருக்கும் கலைஞர், உடனடியாக கலைஞர் டி.வி.யின் செய்தி ஆசிரியரை இந்தச் செய்திக் கோவை ஒளிபரப்பிற்காக ஜெயலலிதா, சசிகலா இருவரிடமும் பகிரங்கமாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கச் சொல்ல வேண்டும். மேலிடத்து சம்மதம் இல்லாமல் எந்த டி.வி. சேனல் செய்தி ஆசிரியரும் இப்படிப்பட்ட ஒளிபரப்புகளைச் செய்யமாட்டார்கள் என்பது எல்லாருக்கும் தெரியும். எனவே, மன்னிப்பு கேட்கும் தார்மீகக் கடமை கலைஞருக்கும் ராமதாஸ§க்கும் கூட இருக்கிறது.

ஜெயலலிதா, சசிகலா இருவரின் அரசியல், ஆட்சி முறை, அணுகுமுறைகள், மதிப்பீடுகள் இவை எதனுடனும் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால் பொது வாழ்க்கையில் இருக்கும் பெண்கள் என்பதால் அவர்களை ஆணாதிக்கப் பார்வையுடன் பார்க்கும் சூழல்தான் இங்கே இருக்கிறது என்பதை அவர்களுடைய கடுமையான விமர்சகர்கள் கூட ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

தமிழகத்தின் அரசியல் முற்றிலும் ஆண் ஆதிக்கப் பார்வையுடைய அரசியல் என்பதனால்தான், கலைஞர் டி.வி.யின் முறைகேடான செய்தி ஒளிபரப்பு பற்றி மௌனம் நிலவுகிறது. முற்போக்கும் பெண்ணியமும் பேசும் இடதுசாரிகளும் தி.மு.க.வைச் சேர்ந்த பெண்ணியக் கவிஞர்களான கனிமொழியும் தமிழச்சியும் சல்மாவும் மௌனத்தை உடைத்து கருத்துத் தெரிவித்தாக வேண்டும்.

இந்த ஆணாதிக்க அரசியலில் விஜய்காந்த் குடிகாரரா என்று விவாதம் எழுந்தால், ஒரு கட்டத்தில் அவர் வெறுப்பாக ‘ஆமாய்யா. நான் குடிப்பேன். இப்ப என்னங்கறே?’ என்று கூடச் சொல்லிவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விட முடியும். அதை இங்கே ஒரு பெண் செய்ய முடியாது. இன்னும் நூறாண்டுகள் ஆனாலும் கூட இங்கே ஒரு பெண் முதலமைச்சராகி, தன்னுடன் பொது நிகழ்ச்சிகளுக்கு தன் கணவரையும் துணைவரையும் அழைத்து வருவது பற்றிக் கனவு கூட காணமுடியாது. அந்தச் சலுகை தொடர்ந்து ஆண்களுக்கு மட்டுமே கோவலன் மரபிலான தமிழ்ச் சமூகத்தில் தரப்படும்.

நாளைக்கு நம் அரசியலில் ஒரு லெஸ்பியன், ஓர் அரவாணி, ஒரு ஹோமோ செக்ஷ§வல் பொறுப்புக்கு வரக் கூடாதா? வரும் தகுதி அவர்களுக்குக் கிடையாதா? என்பதுதான் என் கேள்வி. பிரிட்டனில் ஓரின உறவாளர் அமைச்சராக இருக்கிறார். இன்று உலகம் முழுவதும் ஓரின உறவினர், அரவாணிகள் பற்றிய பார்வைகள் மாறிவருகின்றன.

தமிழ்ச் சமூகம் மட்டும் போலியான ஒழுக்கக் கோட்பாடுகளுடன் நடித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டிய காலம் வந்துவிட்டது. அடுத்த தேர்தலின்போது ஒவ்வொரு கட்சியும், செக்ஸ், ஆண் பெண் உறவு, ஒழுக்க விதிகள் பற்றியெல்லாம் தன் கொள்கை என்ன என்பதையும் தன் தேர்தல் அறிக்கையிலே சொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்..

இந்த வார பூச்செண்டு

தமிழ்நாட்டில் ஆரம்பக் கல்வி முதல் உயர் கல்வி வரை தமிழை ஒரு மொழிப்பாடமாகக் கட்டாயம் படிக்க வேண்டும் என்று தி.மு.க. அரசு பிறப்பித்த அருமையான உத்தரவு சட்டப்படி செல்லும் என்று தீர்ப்பளித்துள்ள உச்ச நீதிமன்றத்துக்கு இ.வா.பூ.

இந்த வார குட்டு

அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை அறிவியல்பூர்வமாக அலசி எதிர்க்கும் அறிவிருப்பது போல, சேது கால்வாய் திட்டத்தை அறிவியல் அடிப்படையில் அலசி ஆராய்ந்து எதிர்க்காமல், பி.ஜே.பி எதிர்ப்பதால், தான் ஆதரிக்க வேண்டும் என்று கண் மூடித்தனமாக ஆதரிக்கும் மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இ.வா.குட்டு.

இந்த வார கேள்வி

ஜல்லிக்கட்டைப் பாதுகாப்பாக நடத்துவது என்பது முடியாத விஷயம் என்று நிரூபணமாகிவிட்டது. கடந்த இரு மாதங்களாகப் பல்வேறு ஊர்களில் ஏராளமான இளைஞர்கள் படுகாயமடையவும் உயிரிழக்கவும் நேரிட்டுள்ளது. ஒரு ஜல்லிக்கட்டில் காவலுக்குச் சென்ற போலீஸ் அதிகாரி கூட படுகாயமடைந்திருக்கிறார். ஜல்லிக்கட்டு போட்டிகளை பத்திரமாக நடத்துவதாக உச்ச நீதிமன்றத்தில் வாக்குறுதி கொடுத்து அனுமதி பெற்ற தமிழக அரசு, சொன்னபடி செய்யாததற்காக அதன் மீது நீதி மன்ற அவமதிப்பு வழக்கை இதுவரை யாரும் போடாமல் இருப்பது ஏன்?

- நன்றி : குமுதம்